பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆய்வு கூட்டங்கள் இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் கோவையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.இதன் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பள்ளிகளை ஆய்வு செய்ய முடிகிறது. அதிகாரிகள் கண்டிப்புடன் மட்டும் இல்லாமல், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளி அசெம்பிளியில் அவர்களை அழைத்து கவுரவிக்க வேண்டும். அப்போது தான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கோவையில் இன்று கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மழை சேதம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட சிஇஓக்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக மற்ற அதிகாரிகள் வந்து உள்ளனர்.
இந்தியாவிலேயே மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். எங்கள் பள்ளிக்கு அமைச்சரோ, அதிகாரிகளோ வந்து மாணவர்களின் திறன்களை சோதித்துக்கொள்ளலாம் என ஆசிரியர்களே கூறும் அளவுக்கு அரசு மாணவர்களின் திறன் வளர்ந்து உள்ளது.
கோவையில் 2 நாள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வரும் பொதுத் தேர்வில் நல்ல ரிசல்ட் கொண்டு வருவது குறித்தும், முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் சென்றடைந்துள்ளதா என ஆய்வு செய்யவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் குழந்தைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு பதிலாக புதிதாக உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படும்.ஏஐ தொழில் நுட்பத்தை கொண்டு வரும் அளவுக்கு பாடத்திட்டம் அமைக்கப்படும்.
22 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்குகிறோம். 1958 பள்ளிகளுக்கு வைபை வசதி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா என கேட்டபோது வழங்கிடுவோம் என்று அமைச்சர் மகேஸ் கூறினார்.