கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர்(26), கண்ணையா (30), பார்வதி(67) முத்தம்மா(23), கீதா(24) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை
சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட கோவை ஆர் எஸ் புரம் காவல் சரகர் மாநகர காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், பி1 பஜார் காவல் நிலைய புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, பி2 ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, பி1 பஜார் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்த்திக் பூபதி ஆகியோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் பாராட்டினார்.