Skip to content
Home » விசிகவில் இருந்து விலகினார்………ஆதவ் அர்ஜூனா…..பரபரப்பு கடிதம்

விசிகவில் இருந்து விலகினார்………ஆதவ் அர்ஜூனா…..பரபரப்பு கடிதம்

  • by Authour

.‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற நிறுவனத்தின் தலைவராக விசிகவுடன் பணியாற்றி வந்த ஆதவ் அர்ஜுனா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். மிகக்குறுகிய காலத்திலேயே, பிப்ரவரி 15ம் தேதி விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து கூறிவருவதாக அவர் மீது விசிகவினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். குறிப்பாக சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் உள்ள திமுகவை நேரடியாக விமர்சித்துப் பேசியிருந்தார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பிறகு விசிகவையும், திருமாவளவனையும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்வதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திருமாவளவனுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: விசிகவின் வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள்.

அந்த பொறுப்புகளோடு கடந்த 2 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயரங்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, ‘சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்’ என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக் கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் ‘சாதி ஒழிப்பு, சமூகநீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்’ அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *