திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ‘Our Temples’ (நம்முடைய கோவில்கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ‘ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபச்சாரங்கள்’ என்ற தலைப்பில் யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்றைய தினம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஆர்.ஜீயர் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 13ம் தேதி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 8 நிமிடம் 3 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சனாதன தொடர்பு குறித்தும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தன்னை குறித்து அவதூறாக பேசி உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனால் எனது பெயருக்கும் புகழுக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் வெளியிட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த போது, உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசியது உறுதியானது.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தனிப்படையினர் சென்னையில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் சென்று அமைச்சர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பேசிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.