திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் நடைபெற்றது. கொள்முதல் விலை பட்டியலை விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்யுமுன் தெரிவிக்க வேண்டும். ஆனால் கொள்முதல் அதிகாரிகள் ஏறக்குறைய 10,டன் பருத்தி கொள்முதல் செய்தபின்னரே விலை படியலை விவசாயிகளிடம் வழங்கி உள்ளனர் மேலும் சென்ற வாரத்தை விட பருத்தி கிலோ ஒன்றுக்கு 7 ரூபாய் குறைவாக வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 1000க்கும் மேற்ப்பட்டோர் திருச்சி-துறையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த துறையூர் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். விவசாயிகளின் போராட்டம் தொடரவே
முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து இரண்டு மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. துறையூர் தாசில்தார் புஷ்பராணியோ சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளின் குறைகளை கேட்க வில்லை டி.எஸ்.பி.யாஸ்மின் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் இப்பகுதியில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் துறையூருக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் துறையூரில் உள்ள வட்டாட்சியர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்காமல் அவர்களது போராட்டம் குறித்து கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் எழுப்பி உள்ளனர்.