தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடநலக் குறைவால் காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்துக்கு இருவரும் ஆறுதல் தெரிவித்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்… தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்