கரூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை அருகில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பசுபதி செந்தில் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் கட்டுமான பணி முடிந்த பிறகு பிரியாணி கடை உரிமையாளர் கிருஷ்ணனுக்கு கடையை குத்தகைக்கு விடாமல் வேறு ஒருவருக்கு கடையை வாடகைக்கு விட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குத்தகைக்காக தான் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தருமாறு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பசுபதி செந்திலிடம், பிரியாணி கடை உரிமையாளர் கிருஷ்ணன் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து ஏமாற்றி வந்த பசுபதி செந்தில் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரியாணி கடை உரிமையாளர் கிருஷ்ணன் புகார் அளித்த நிலையில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு, மீதி தொகையை 25 நாட்கள் கழித்து தருவதாக பசுபதி செந்தில் அவகாசம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி பணத்தை திருப்பி தராத நிலையில், பிரியாணி கடை உரிமையாளர் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஈரோடு மண்டல் துணை தலைவர் பசுபதி செந்திலை கரூர் நகர போலீசார் கைது செய்து, கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.