தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…
தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தஞ்சாவூர் அரண்மனையை அடுத்துள்ள தாஸ்தமால் சந்தில் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் இருந்தது. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தஞ்சையில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கோவிலின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் இடிபாடு பகுதியை அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பழுதடைந்த மற்ற பகுதிகளையும் பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரவலாக மழை…
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதே போல் தஞ்சாவூர், திருவையாறு, அம்மாபேட்டை, சாலியமங்கலம், பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவையாறு, கண்டியூர், பள்ளி அக்ரஹாரம், பூதலூர் அதிராம்பட்டினம் திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கணக்கீடு எடுக்கும் பணியில் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிர்கள் பாதிப்பு…
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை சூரக்கோட்டை ஒரத்தநாடு பாபநாசம் மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் சுமார் 100 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடியும் பாதிப்படைந்துள்ளது.
கனமழை எச்சரிக்கை… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 800-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் உள்ளது. சுமார் 5,000 மேற்பட்ட மீனவர் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.