அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர் தேங்கியுள்ளதாலும், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், வீடுகள் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி பொதுமக்கள், இதுவரை அதிகாரிகள் யாரும் தங்கள் பகுதியை பார்வையிட வரவில்லை எனக்கூறி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருபுறங்களிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்றது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறுவாலப்பர் ஊராட்சிக்குட்பட்ட கொக்கரணை கிராமத்தில் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 58 குடும்பங்கள் வசித்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, 58 குடுமங்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக உட்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட உட்கோட்டை, கரைமேடு பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. இதில் அவரவர்கள் சொந்தமாக வீடுகள் கட்டி கடந்த மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை
வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக இவர்களின் வீடுகளை சுற்றி தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்கவும், மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வீடுகளை சுற்றி தேங்கி உள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சில தனிநபர் ஆக்கிரமிப்புகளால் தான் இது போன்று தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே அவற்றை அகற்றுவதுடன், மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மழை நீர் தேங்கியுள்ளதால் அவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்று மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், உரிய வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.