வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அடைமழை கொட்டி வருகிறது. திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. திருச்சி மத்திய சிறை பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மண்ணச்சநல்லூர், தொட்டியம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள். மழை நீரில் மூழ்கியது. , இன்னும் சில நாட்கள் பயிர்கள் மூழ்கி கிடந்தால் அழுகிபோகும் நிலையில் தண்ணீர் வயல்களில் குளம்போல தேங்கி நிற்கிறது.திருச்சி மாநகரில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. திருச்சி கிராப்பட்டி, அன்பு நகர் பகுதியில் மழை வெள்ள பகுதிகளை இன்று காலை அமைச்சர் கே. என். நேரு, கலெக்டர் பிரதீப் குமார் , மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன் ஆகியோர் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மழை காரணமாக திருச்சியில் கடந்த 2 நாட்களாக தரைக்கடை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடைவீதிகள், பஸ்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் மழை வெள்ளமும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியில்சுமார் ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. இவர்களது குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அந்த வெள்ள நீரை வெளியேற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வடிவதற்கு ஜே சி பி இயந்திரத்தின் மூலம் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் 1254.3 மி.மீ மழை பெய்துள்ளது. புள்ளம்பாடி பகுதியில் அதிக மழை கொட்டியது. இதனால் மானாவாரி ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.
துவாக்குடிவடக்கு மலை அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் செபஸ்தி அம்மாள் (55)இவருக்கு சொந்தமான கூரை வீடுஅடைமழை காரணமாக நேற்று இரண்டு சுவர்களும் மேற்கூரையும் இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை பொருட்கள் மட்டுமே சேதமானது இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். துப்பாக்கி தொழிற்சாலை பகுதியிலிருந்து மழை நீர் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்குப் பகுதியில் உள்ள உப்பாற்றில் சென்றடையும். துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் பெய்யக்கூடிய மழை நீர் இச்சாலை வழியே வழியும் பொழுது அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து அப்பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வரும் ராஜராஜன் கூறுகையில் ஒவ்வொரு மழைக்கும் நாங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றோம் மழை நீர் கழிவுகளுடன் எங்கள் வீடுகளுக்குள் வந்து விடுகிறது எங்கள் டாய்லெட் பகுதிகள் நிரம்பி மிகப்பெரிய அவஸ்தையில் நாங்கள் வாழ்ந்து வரும் சூழல் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது இதன் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ,தொகுதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து விண்ணப்பம் செய்தோம் இதுவரை நடவடிக்கை இல்லை தற்பொழுதாவது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .
இவ்வாறு அவர் கூறினார்.