நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள். கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் இன்று விமரிசைாக நடந்து வருகிறது.
கடந்த 4ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், தேரடி வீதிகளில் உலா வரும் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவின் 10ம் நாளான இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அங்குச் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோவில் கருவறையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட்டது. பரணி தீபத்தைக் காணக் கோயிலுக்கு உள்ளே 7,500 பேருக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. இதற்கான அனுமதிச் சீட்டை பெற்றுள்ளவர்கள், அதிகாலை 2.30 மணி முதல் கோவிலில் அனுமதிக்கப்பட்டனர். பரணி தீபத்தைக் கண்டால் புண்ணியம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
இன்று மாலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. நேற்றைய தினம் கனமழை கொட்டிய நிலையில், மகா தீப கொப்பரைக்குக் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மா என்று இந்த மகா தீப கொப்பரை மூன்று அடுக்குக் கொண்டதாக உள்ளது.
தீபக் கொப்பரைக்கு அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்து பல்வேறு வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டன. சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னரே கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 2668 அடி உயரம் கொண்ட தீபமலை உச்சிக்கு மகா தீப கொப்பரையை சுமார் 20 கோயில் ஊழியர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா எனப் பக்தி முழக்கத்துடன் எடுத்துச் சென்றனர். பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட இந்த கொப்பரையில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளால் திரி பயன்படுத்தி இன்று மாலை மாலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த மகாதீபத்தை கோவிலில் இருந்து காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதிலும் மலையின் உச்சிக்குச் சென்று தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை தேர்ச்சி அடைவோருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப விழாவையொட்டி இன்று காலையில் கிரிவலம் தொடங்கியது. காலையிலேோய சுமார் 10 லட்சம் பேர் திருவண்ணாமலையில் திரண்டனர். அவர்கள் கிரிவலம் சென்று கொண்டிருக்கிறார்கள். கிரிவல பாதையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறார்கள். இந்த வருடம் சுமார் 40 லட்சம் மக்கள் திருவண்ணாமலையில் திரளுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையங்கள் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டு உள்ளது.