தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள கருவேல மரங்களை வெட்டி, காயவைத்து, அதனை கரியாக்கி வியாபாரம் செய்து வருகிறார். இப்பணிகளுக்காக செல்வராஜ், தனது குடும்பத்தினர் மஞ்சுளா (41), கோபால்(28), ஐஸ்வர்யா (24), ஆகாஷ்(2), சுகன் (10), மற்றும் எட்டு மாத கைக்குழந்தை ஆகியோருடன் மருதையாற்றின் கரையோரம் குடிசை அமைத்து மரக்கரி தயாரிக்கும் வேலை செய்து வந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின்
காரணமாகவும், பச்சை மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தின் நடுவே செல்வராஜ் குடும்பத்தினர் மாட்டிக் கொண்டனர். இவர்கள் மருதையாற்று வெள்ளத்திற்குள் சிக்கித் தவிப்பது குறித்து அாியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கலெக்டர் ரத்தினசாமி தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தைக் கடந்து சென்று, செல்வராஜ் குடும்பத்தினரை மீட்டு, பாதுகாப்பாக அழைத்து கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளை முதலில் அலுமினிய கொப்பரையில் அமர வைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பின்னர் பெரியவர்களை கயிறு கட்டி, தங்களுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட ஏழு பேருக்கும் உடனடியாக உணவு வழங்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி பாராட்டு தெரிவித்தார்.