திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், வள்ளியம்மை குடும்பத்தினருக்கு ரூ. 10,22,062 இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம்,உத்தரவிட்டது. ஆனால் உரிய காலக்கெடுவுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடை அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கவில்லை.
இது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மாவட்ட சிறப்பு வாகன இழப்பீடு கோருரிமை கோர்ட் நீதிபதி நந்தினி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வியாழக்கிழமை சென்ற நீதிமன்ற ஊழியர்கள், அங்கு நின்றிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். நீதிமன்ற உத்தரவை பஸ்சில் ஒட்டினர். இது குறித்த தகவல் அரசுப்போக்குவரத்துக்கழக நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக விபத்து இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைய போக்குவரத்துக்கழக அலுவலர்கள் தரப்பில் நீதிமன்ற பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.