பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.,12) டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.