கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல் துறை மற்றும் UYIR அமைப்பினர் இணைந்து நடத்தும் “UYIR Road Safety Hackathon-2025” நிகழ்வானது தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தபடும் கோயம்புத்தூர் சாலைப் பாதுகாப்பு மாதிரி நகர திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஹேக்கத்தான் படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சாலைப் பாதுகாப்பில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், “UYIR Road Safety Hackathon-2025”-ன் துவக்க விழா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உள்ளிட்ட அதிகாரிகள், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, UYIR நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், UYIR அறங்காவலரும் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தானின் திட்டப் பொறுப்பாளருமான மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது… கோயம்புத்தூரில் இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார். கல்வி, மருத்துவம், தொழிற்துறை என எல்லாவற்றிலும் கோவை சிறந்து விளங்குகிறது என்று கூறிய அவர், விபத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருப்பது கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சனை என்றார். தொடர்ந்து, சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்… கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சக்தி ரோடு சாலை அகலப்படுத்துவதற்காக 54 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அதனை தருவதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என தெரிவித்தார்.
அதானி- திமுக தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை, எனவே சில கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்றார். உள்ளூரில் நின்றாலும் தோல்வி வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள் அவர்களுடைய இருப்பிடத்தை காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள் என்றும் அவதூறு கருத்துக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசியல் என்பது நாகரிகமாக இருக்க வேண்டும், அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவ பட்டவர்களாக இருக்க வேண்டும், கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது யாரையும் பழிச்சொல் பேசுவது போல் இல்லாமல் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கூறிய அவர் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் அது போன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள் என்றார்.
பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார் எனவும்
அனைத்து துறைகளும் மழையை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது எனவும்
விழுப்புரம் கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்ப நின்ற அளவிற்கு அரசின் இயந்திரம் சிறப்பாக செயல்பட்டது என்றார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.