Skip to content
Home » வைக்கம் விழா … சமூகநீதிக்கான வெற்றி….. பெரியார் நினைகம் திறந்து முதல்வர் பேச்சு

வைக்கம் விழா … சமூகநீதிக்கான வெற்றி….. பெரியார் நினைகம் திறந்து முதல்வர் பேச்சு

கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி  வைக்கத்தில் உள்ள  பெரியார் நினைவகம்  புதுப்பிக்கப்பட்டது.  அந்த நினைவகம், அதில் புதிதாக உருவாக்கப்பட்ட நூலகமும் இன்று  திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து ரிப்பன்வெட்டி  திறந்து வைத்தனர். விழாவுக்கு கேரள முதல்வர்  பினராயி விஜயன் தலைமை தாங்கி பேசினார்.  தமிழக தலைமை  செயலாளா் முருகானந்தம் வரவேற்று பேசினார்.  நூலகத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்  திறந்து வைத்தார்.  விழாவில்   கர்நாடக  எழுத்தாளர்  தேவநூர மகாதேவாவுக்கு  2024க்கான  வைக்கம் விருதினை தமிழக முதல்வர் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:  பெரியாரை எதிர்த்த மண்ணிலேயே இன்று அவருக்கு பாராட்டு விழா எடுக்கப்படுகிறது. இது திராவிட இயக்கத்தின் வெற்றி.  அண்ணா கூறியது போல வைக்கம் வெற்றியின் சின்னம்.  சமூக நீதி வரலாற்றில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.  இந்த நினைவகத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வரலாற்று பெருமை.  இந்த விழா கொண்டாடும் நேரத்தில் எனக்கு ஒரு சின்ன வருத்தம், இந்த காட்சியை காண நம்முடைய முத்தமிழ் அறிஞர் நம்மிடம் இல்லையே என்ற வருத்தம் தான்.

பெரியாருக்கு எதிராக யாகம் வளர்த்த ஊரில் இன்று அவருக்கு புகழ்மாலை சூட்டப்படுகிறது.   எங்கள் அழைப்பை  ஏற்று வந்திருக்கிறார் கேரள முதல்வர்.  அனுமதி தந்தது முதல் எல்லா முன்னெடுப்புக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார். அதற்காக அவருக்கும்  கேரள அரசுக்கும், அமதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.   பினராயி விஜயன் இந்தியாவின் ஆளுமைகளில் ஒருவர்.

கல்வியில் சிறந்த  கேரளாவில் இந்த நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளா வரும்  அனைவரும் இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.   சமூக நீதி புரட்சியின் அடையாளமாக வைக்கம் நினைவகம் இங்கு உருவாகி உள்ளது.  கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தேவநூர மகாதேவாவுக்கு முதல் வைக்கம் விருது வழங்கப்பட்டது.

வைக்கம் போராட்டத்தில் கேரள தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர். போராட்டத்தை தொடர  தமிழ்நாட்டில் இருந்து  பெரியாரை அழைத்தனர். அவர்  வைக்கம் வந்து 5 மாதம் தங்கி இருந்து போராடினார்.  பெரியாரை சந்தித்த பிறகே திருவிதாங்கூர் ராணியை காந்தி சந்தித்தார்.  பெரியாாின் வைக்கம் போராட்டத்தை அம்பேத்கர் பாராட்டினார்.  தீண்டாமையை ஒழிக்க  திருவிதாங்கூரில் எடுத்த முயற்சி முக்கியமானது என அம்பேத்கர்  கூறினார்.  இனி நாம் அடைய இருக்கும் வெற்றிக்கு அடையாளமாக வைக்கம் இருக்கும்.

சமூக நீதி போராட்டத்திற்கு தொடக்கப்புள்ளி வைக்கம் தான்.   வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அந்த பட்டியல் நீளமானது.  சாதிய  பாகுபாடுகளுக்கு எதிராக நமது போராட்டத்தை தொடர வேண்டும்.  100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட   சமூக, பொருளாதார, அரசியலில் முன்னேறி உள்ளோம். ஆனால்இன்னும் முன்னேற வேண்டிய  தூரம் அதிகம் உள்ளது.   எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்.

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் என்பதை ஆட்சியின் கொள்கையாக   அறிவித்து உள்ளோம். அது தான் திராவிட மாடல்  அரசின் கொள்கையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கேரள முதல்வர்  பினராயி விஜயன் பேசியதாவது:  சமூக நீதியை உயர்த்தி பிடித்தவர் பெரியார்.  வாழ்நாள் முழுவதும் சமூகநீதியை  வலியுறுத்தி வந்தவர் பெரியார். அந்த காலத்தில் வருணாசிரமத்தின்படி  பாகுபாடு நிலவி வந்தது. அதை எதிர்த்தவர் பெரியார்.  பெரியார் சமூகநீதி காவலர்.  வருணாசிரம கருத்துக்களை  முறியடித்தவர் .  இந்த விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்றபது இரட்டிப்பு மகிழ்ச்சி.  இந்த விழாவுக்கு தமிழக முதல்வரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.  முடிவில் கேரள தலைமை செயலாளர் சாரதா முரளிதரன் நன்றி கூறினார்.

விழாவில்  தமிழக அமைச்சர்கள்   எ.வ வேலு, சாமிநாதன்,  கேரள அமைச்சாகள்  வாசவன், சஜி செரியன் , தி.க. தலைவர் வீரமணி , திருமாவளவன் எம்.பி. மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *