ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி பூரணி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
கும்பகோணத்தை தலைமயிடமாக கொண்டு இயங்கி வந்த ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், ரூ.1,00,000ம் முதலீடு செய்தால், 18 மற்றும் 24 மாதங்களுக்கு, மாதந்தோறும் ரூ.15,000ம் அல்லது ரூ.10,000/-மும், 1 கிராம் தங்க நாணயமும் தருவதாகவும், திட்டத்தின் முடிவில் முதலீட்டு தொகையோடு லபாபத் தொகையும் தருவதாக பொது மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, நம்ப வைத்து, முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடிக்கு மேல் தொகைகளை பெற்று, அவற்றை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் வந்தது.
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் (அஞ்சல்), வக்ராநல்லூர் ஷேக் அலாவுதீன் மகன் நூருல் அமீன், என்பவர் இது தொடர்பாக நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கானது தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் மேற்படி நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி சாலை, 57- B ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி நேரில் புகார் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.