வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கடந்த 2 தினங்களாக அறிவித்து உள்ள நிலையிலும் திருச்சியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை.
இதனால் மாணவ, மாணவிகள் அடைமழையிலும் நனைந்து கொண்டே பள்ளி, கல்லூரிக்கு சென்றனர். எத்தனை குடை பிடித்தாலும் மழையில் நனையாமல் செல்ல முடியவில்லை. புத்தக மூட்டைகளுடன் கடும் அவதியில் மாணவ, மாணவிகள் சென்றனர். வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள் முழுக்க நனைந்து விட்டனர். நனைந்த நிலையில் எப்படி மதியம் வரை பள்ளி, கல்லூரியில் இருக்க முடியும்?
தமிழகத்தில் ராமநாதபுரம், சென்னை, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர், கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மட்டும் ஏன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. அதிகாரிகள் ஏன் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள் என பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கலெக்டர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, அல்லது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்ற நிலை இருந்தும் யாரும் மழையை கண்டுகொள்ளவில்லை.
இத்தனைக்கும் நேற்று மாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்று அதிகாலை முதல் மழை பெய்கிறது. ஆனாலும் இது அதிகாரிகளின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை என பெற்றோர்கள் குமுறுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் தான் அதிகாரிகள் இத்தனை அலட்சியப்போக்குடன் இருக்கிறார்கள் என மாணவர்களும், பெற்றோர்களும் வேதனையை வெளிப்படுத்தினர்.