கோவை மாவட்டம் மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணுவாய் பகுதியில் இருந்து கல்வீரம்பாளையம் பகுதிக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் இல்லாததால் ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் மாணவ மாணவிகள் சென்று படித்து வருகின்றனர். சுமார் 5 கிமீ தூரம் உள்ள இந்த இடைவெளியை தனியார் வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்து சென்றோ படித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் பொது போக்குவரத்து இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த பகுதியில் சோமையம்பாளையம் வரை மட்டும் ஒரே ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்த அரசு பேருந்தை பள்ளி மாணவர்களுக்காவது கல்வீரம்பாளையம் பகுதி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களுடன் இணைந்து ஆணிவேர் எனும் தனியார் அமைப்பும் (NGO) சேர்ந்து மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை அமைச்சர், மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து மனு அளித்திருந்தனர். மனு மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது அரசு பேருந்தானது கணுவாய் பகுதியில்
இருந்து கல்வீரம்பாளையம் பகுதி வரை நீட்டித்து இயக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த பேருந்து சேவையானது துவங்கி உள்ள நிலையில் இன்று அதனை பொதுமக்களும் ஆணிவேர் அமைப்பினரும் சோமையம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் அந்தப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பொன்னாடை அணிவித்து நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இப்பேருந்து சேவையால் கணுவாய், யமுனா நகர், காளப்பநாயக்கன் பாளையம், சோமையம்பாளையம், நவாவூர் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பாரதியார் மற்றும் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயனடைவர்.