கரூர் அருகே வரவணை பகுதியில் இரவில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. வழக்கு மட்டுமே பதிவு செய்து வந்த காவல்துறை – மாவட்டத்தில் முதன் முதலாக லாரியின் உரிமையாளர், ஓட்டுநர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வரவனை கிராமம், வீரமலைபாளையத்தில் இரவு நேரத்தில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகாவுக்குட்பட்ட சிங்கம்பட்டி, வரவனை, மைலம்பட்டி, தரகம்பட்டி, காணியாளம்பட்டி, சேங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் இடங்கள் மற்றும் அரசு ஏரி, குளங்களில் இரவு நேரங்களில் அனுமதி இன்றி அடிக்கடி மணல் கொள்ளையர்கள் கிராவல் மண், ஆத்துவாரி மணல் அள்ளி லாரியில் கடத்தி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கும், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மண் கடத்தல் லாரிகளால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வீரமலைபாளையம் பகுதியில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளி கடத்தி வந்துள்ளனர். கிராமத்தில் நள்ளிரவு வந்த இரண்டு லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர்.
பின்னர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்த போலீசார், லாரி டிரைவர்கள் வடிவேல், மணிவேல் மற்றும் லாரி உரிமையாளரான உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர். 2 லாரிகள், ஒரு ஜேசிபி வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பல முறை கிராவல் மண் மற்றும் ஆத்துவாரி மணல் கடத்தி இருந்தாலும் வழக்கு பதிவு மட்டுமே செய்து வந்த நிலையில், முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்த சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.