திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார். இவரது அத்தை மகன் மகாதேவன்(26), கோட்டூர் இருள்நீக்கி அருகே உள்ள நெருஞ்சனங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன். இவர் மன்னார்குடியில் மகளிர் சுய உதவிக் குழு கடன் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார்.
வசந்தபிரியா , மகாதேவன் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், மகாதேவனின் நடவடிக்கை பிடிக்காததால் , வசந்தபிரியா, மகாதேவனை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 வருடமாக வசந்த பிரியா காதலை துண்டித்து விட்டார். இருப்பினும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மகாதேவன், வசந்த பிரியாவை,
டார்ச்சர் செய்து வந்தார்.
நேற்று மதியம் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வசந்த பிரியாவை, வீடு புகுந்து மகாதேவன், சரமாரியாக கத்தியால் குத்தினார். கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் குத்துப்பட்ட வசந்த பிரியா திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகாதேவன் தப்பி ஓடிவிட்டார். அவரை கோட்டூர் போலீசார் இன்று கைது செய்தனர்.