தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் (50), இதேபகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர்கள் தங்களுக்கு நேற்று காலை சொந்தமான ஆடுகள் மற்றும் மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர். இந்நிலையில் மாலை மேய்ச்சல் முடிந்து திரும்பிய ஆடுகள் மற்றும் மாடு ஆகியவை திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் தனபாலுக்கு சொந்தமான ஒரு கன்றுக்குட்டி மற்றும் 10 ஆடுகள், அன்பழகனுக்கு சொந்தமான 2 ஆடுகள் திடீரென இறந்து விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் இதுகுறித்து வல்லம் போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வல்லம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடைத்துறை டாக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இறந்த ஆடுகள் மற்றும் கன்று குட்டி ஆகியவை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் புதைக்கப்பட்டது. விஷச் செடி எதையாவது ஆடுகள் மற்றும் கன்று குட்டி சாப்பிட்டதா அல்லது வேறு ஏதாவது விஷ உணவை சாப்பிட்டதா? விஷ பூச்சிகள் தீண்டியதா என்பது குறித்து உடன் தெரியவில்லை. இந்த சம்பவம் தோழகிரிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,