ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன் எடுத்தது; ஆஸ்திரேலிய அணி லபுசேன் அரைசதம், ஹெட் சதம் ஆகியவற்றின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 157 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ‘டாப்-ஆர்டர்’ பேட்டர்கள் ஏமாற்றினர்.ராகுல் (7), ஜெய்ஸ்வால் (24), சுப்மன் கில் (28), அனுபவ கோலி (11), கேப்டன் ரோகித் (5) சோபிக்கவில்லை. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்திருந்தது. ரிஷாப் பன்ட் (28), நிதிஷ் குமார் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று (டிச.,8) 3வது நாள் ஆட்டம் துவங்கிய 6வது பந்தில் ரிஷாப் பன்ட் (28) கேட்சானார். அடுத்து, அஷ்வின் (7), ஹர்ஷித் ராணா (0), நிதிஷ் குமார் (42), முகமது சிராஜ் (7) அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. வெறும் 18 ரன்களே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. 19 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மெக்ஸ்வீனி, கவாஜா துவக்கம் தந்தனர். இருவருமே ஆஸி., வெற்றியை வசமாக்கினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் 14ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் துவங்குகிறது.