ஈரோடு கிழக்குத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியதும், முதல் ஆளாக தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் இப்போது வட்புமனு தாக்கல் செய்வது 233வது தேர்தல் ஆகும்.
இவர் ஜனாதிபதி தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி, மற்றும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் என இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வது இவரது வாடிக்கை. இன்றும் வழக்கம் போல முதல் ஆளாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர் தவிர மேலும் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் ஒருவர் காந்தி வேடத்தில் வந்தார். இன்னொருவர் செருப்புமாலை அணிந்து வந்தார்.மாலை 3 மணியுடன் இன்றைய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இன்று வேட்புமனு தாக்கல் செய்த 4 பேரும் சுயேச்சைகள். அரசியல் கட்சி வேட்பாளர்கள் நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள். 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 10ம் தேதி மாலை 3 மணிவரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.