திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன் (40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருகிறது. இறுதிநாளான நேற்று மாலை சுதாகரன் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஓடும் தொழிலாளர் அலுவலகத்தின் முன் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த என்ஜின் டிரைவர்கள் கவுதமன், ஜெயக்குமார் ஆகியோர் தேர்தல் தொடர்பாகவும் எஸ்.ஆர்.எம்.யு. தொழிலாளர்களையும் விமர்சனம் செய்து பேசியதாக தெரிகிறது. இதைப்பார்த்த சுதாகரன் 2 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுதாகரனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்ஜின் டிரைவர்கள் கவுதமன், ஜெயக்குமார் ஆகியோரை அதே தொழிற்சங்கத்தை சேர்ந்த வெங்கடாஜலபதி என்ற ஊழியர் காரில் அழைத்துச்சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த என்ஜின் டிரைவர்கள் ரயிலை இயக்க பணிக்கு செல்ல மறுத்து, ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர் அலுவலகம் முன், மாலை 6 மணி முதல் திரள தொடங்கினர். இதனால் திருச்சியில் இருந்தும், திருச்சி வழியாகவும் செல்லும் ரெயில்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த திருச்சி ரயில்வே கோட்ட மேனேஜர் அன்பழகன் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க கோட்ட செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட மாற்று சங்கத்தை சேர்ந்த 2 பேர் மீதும், அவர்கள் தப்பிக்க வைத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து என்ஜின் டிரைவர்கள் கவுதமன், ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப்படி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு எஸ்ஆர்எம்யூ சங்கத்தினர் பணிக்கு சென்றனர்.