மதுரை உயர் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களுக்கு எதிராக வரும் அனைத்து புகார்களுக்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தஞ்சாவூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்த ஒருவர் தன்னைக் காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கின் புகார்தாரர், எதிரியை திருமணம் செய்து கொண்டு அவர் கொடுத்த வழக்கை முடித்து வைக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், வழக்கின் மனுதாரர் போலிசாரின் நேரத்தை வீணடித்ததாக கருதி அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற புகார்களைக் கொடுத்து காவல் துறையினரின் நேரத்தை வீணடிக்கும் நபர்களுக்கு உயர் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.