தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை இன்று வழங்கினார்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுபம் மஹாலில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட 322 பயனாளிகளுக்கு ரூ.131.25 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் சிறப்புமிக்க திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியாக, புரட்சியாளராக, இந்திய அரசமைப்பு சட்டத்தை வழிவகுத்து தந்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பெறுவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. புரட்சியாளர் அம்பேத்கர் காட்டிய வழியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு கைதூக்கிவிடும் வகையில் தூய்மை பணியாளர்களை முதலாளிகளாக மாற்றும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.