தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு அரையாண்டுத் தேர்வுகள் இம்மாவட்டங்களில் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து. கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை 2.01.2025 முதல் 10.1.2025 ம் தேதிக்குள் நடத்திடுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்டுள்ள மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழை நீர் வடிந்த பிறகு முறையாக பள்ளி திறக்கும்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்திடவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை முடித்திடவும். மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இம்மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறைக் காலம் 24.12.2024 முதல் 01.01.2025 வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.