நாகை எம்.பி. செல்வராஜ் மக்களவையில் பேசியதாவது: காலத்துக்கு ஏற்ப ரயில்வே தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க ஆர்வம் காட்டும் ரயில்வே துறை, இருக்கும் மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கவனிக்க தவறுகிறது. ‘கவாச்’ போன்ற சாதனங்களும், அதிக தொழில்நுட்பம் கொண்ட புதுப்புது சாதனங்களும் அனைத்து வழித்தடங்களிலும் நிறுவப்பட வேண்டும். அனைத்து வழித்தடங்களையும் இரட்டை வழிப்பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கட்டண சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
முன்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அந்தத் தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், பொதுப் பெட்டிகளை கூடுதலாக இணைத்துவிட வேண்டும்.
மதுரை – புனலூர் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல், வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து காலையில் திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து கோயம்புத்தூர், பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், மயிலாடு துறை வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு செல்வராஜ் எம்.பி. பேசினார்.