வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி புதுவையில் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பார்வையிட்டனர். உடனடியாக தமிழக வௌ்ள பாதிப்புக்கு ரூ.2ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் மத்திய குழுவையும் அனுப்பி வைக்கும்படி முதல்வர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு இன்று சென்னை வருகிறது. சென்னை வரும் ஒன்றிய குழுவினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது.