தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் 3-வது நாளாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மேற்பார்வையில் தஞ்சை மாநகராட்சிக்குபட்பட்ட பீரங்கி மேடு, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வளர்கள், பணி மேற்பார்வையளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் கடை மற்றும் குடோனில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 3 டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருடகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் விற்பனை செய்த கடை. குடோன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த சோதனை அதிரடியாக நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.