திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள் அலுவலகத்தின் வெளியே வந்து கதவை சாத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி துணைத்தலைவர் சுகுணாவின் கணவர் ராஜ் மோகனின் அட்டகாசத்தை, அரசே தடுத்து நிறுத்து, நகராட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ராஜ்மோகன் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டுவதை தடை செய். அத்து மீறும் ராஜ் மோகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடு என அவர்கள் கோஷம்போட்டனர்.
இந்த போராட்டம் குறித்து நகராட்சி ஊழியர்கள் கூறியதாவது:
லால்குடி நகராட்சி துணைத்தலைவர் சுகுணாவின் கணவர் ராஜ்மோகன். இவர் தினமும் நகராட்சி அலுவலகத்திற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள் முதல் ஆணையர் வரை அனைத்து ஊழியர்களையும் அழைத்து அதை செய், இதை செய், அவனை மாற்று, இவனை மாற்று என ஏக வசனத்தில் உத்தரவு போடுகிறார்.
இவரது அத்து மீறல் மற்றும் மிரட்டல் காரணமாக ஆணையர் குமார் மன உளைச்சலில் விடுப்பு போட்டு விட்டு சென்று விட்டார். நகராட்சி அலுவலகத்தில் பணி ஒழுங்காக நடைபெற வேண்டுமானால் ராஜ்மோகன் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பிரச்னையை மாநில அளவில் எடுத்து செல்வோம். ராஜ் மோகனால் இங்குள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.