தமிழ் நாட்டில் முருங்கை சாகுபடி அதிகம் நடைபெறும் இடங்களில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியும் ஒன்று. செடி முருங்கை, மர முருங்கை ஆகிய இரண்டும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் இங்கிருந்து அனுப்பப்படுவதுடன் சீசன் நேரங்களில் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து முருங்கைகாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் தற்போது இங்கு சீசன் இல்லை. இங்குள்ள முருங்கை செடி வைத்த, 90 நாளில் அறுவடைக்கு வந்து விடும். ஒரு மாதத்திற்கு முன் இந்த பகுதியில் முருங்கை மரங்கள் பூக்கும் நேரத்தில் பலத்த காற்றுடன் மழையும் கொட்டியதால் பூக்கள் உதிர்ந்து போனது. இதனால் தற்போது உள்ளூர் விற்பனைக்கு கூட இங்கு முருங்கை காய்கள் கிடைப்பதில்லை.
அதே நேரத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக், பரோடா பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு வந்து , அங்கிருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மார்க்கெட் வழியாக அரவக்குறிச்சிக்கு முருங்கைகாய்கள் வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தருவிக்கப்பட்ட முருங்கைகாய்கள் தற்போது அரவக்குறிச்சி பகுதியில் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரவக்குறிச்சியில் இனி பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தான் காய்கள் அறுவடை தொடங்கும்.
நேற்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு முருங்கைக்காய் ₹50 முதல் ₹55 வரையிலும், 1 கிலோ ₹400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ ₹500 வரை விற்பனையாகிறதுமழை மற்றும் வரத்து குறைவால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.