அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் ஸ்ரீபுரந்தான் அரியலூர் செல்லும் சாலையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், முத்துவாஞ்சேரி வடக்கு தெரு பகுதியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர்
வழங்கவில்லை. குடிநீருக்காகவெகு தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. தற்பொழுது பெய்த மழையில், சாலைகள் சேரும் சகதியுமாக இருப்பதால், வழுக்கி விழுந்து பாதிக்கப்படுகிறனர்.
சாலையில் மின் விளக்குகள் ஒளி வழங்காததால் இரவில் நடமாட சிரமம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள்குற்றம் சாட்டுகின்றனர். எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டும், அதிகாரிகள் இதைக்கூட செய்து தர முடியாத நிலையில் இருந்து வருவதாக கூறினர். தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத காரணத்தால் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அரியலூர் – ஸ்ரீபுரந்தான் சாலையில் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.