Skip to content
Home » திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

 நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  எத்தனையோ திருவிழாக்கள் நடைபெற்றாலும்,  அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள்.

இந்த காா்த்திகை தீப திருவிழாவுக்கான  கொடியேற்றம் இன்று காலை   நடந்தது. கொடியேற்றத்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனி நடைபெறும்.

நாளை  2ம்நாள் காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும்.

6ம்தேதி 3ம் நாள் காலை உற்சவத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ட வாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 7ம்தேதி 4ம்நாள் உற்சவத்தில், காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர்.

8ம் தேதி 5ம்நாள் காலை உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி நடைபெறும். 9ம்தேதி 6ம்நாள் காலை உற்சவத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும்.

10ம் தேதி 7ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும். அன்று மாட வீதியில் பஞ்சரதங்கள் பவனி வரும். 11ம்தேதி 8ம்நாள் உற்சவத்தில் காலையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலையில் பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். 12ம்தேதி 9ம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக 13ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதில்  20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள  விடுதிகள்  பக்தர்கள் வருகையால் ஏற்கனவே  நிரம்பி விட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *