பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியில் இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சிறு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (03.12.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் புயல் மழை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலான தொடர் மழை பெய்தது. அதன் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரியானது, அக்டோபர் 16ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. நீர்வளத்துறையின் சார்பில் இந்த ஏரியானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. அரும்பாவூர் பகுதியில் 02.12.2024 அன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக இன்று காலையில் அரும்பாவூர் பெரிய ஏரியின் மதகிற்கு அருகில் உள்ள கரையில் சிறு உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஏரியில், மதகுக்கு அருகில் ஏற்பட்டுள்ள சிறு உடைப்பினை சரி செய்திடும் வகையில் நீர்வளத்துறை, வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறையினர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தியும், மணல் மூட்டைகளைக் கொண்டும், உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஏரியானது முழுவதுமாக சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும். அரும்பாவூர் பெரிய ஏரி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நீர்வளத் துறை மற்றும் வருவாய் துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் , அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் .பார்த்திபன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.