கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய சிலம்பம் மற்றும் விளையாட்டு அகாடமி சார்பாக மூன்றாவது கலை சமர் தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை சரவணம்பட்டி உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிலம்பம் தலைமை பயிற்சியாளர் நந்தகுமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போட்டியை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் போட்டியை துவக்கி வைத்தார்.இதில் சென்னை,மதுரை,திருச்சி,ஈரோடு,
நாமக்கல்,தஞ்சை,கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி
மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். நான்கு வயது சிறுவர், சிறுமிகள் முதல் 60 வயதான பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இதில்,ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம், நடு கம்பு, ஒற்றை சுருள் வாள் வீச்சு,நெடு கம்பு,வேல் கம்பு வீச்சு,வாள் கேடயம்,குத்து வரிசை,அடிமுறை, வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..
தமிழர் பாரம்பரிய கலைகளை மீட்கும் விதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இதில் சிறு குழந்தைகள்,மாணவ,மாணவிகள் கம்புகளை அசத்தலாக சுழற்றி அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.