பெஞ்சல் புயல் புதுச்சேரியில் கரையை கடக்கும்போது பக்கத்து மாவட்டமான விழுப்புரத்திலும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை உடனுக்குடன் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி 30ம் தேதி பகலிலேயே விழுப்புரம் வந்து முகாமிட்டார். புயல் கரையை கடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சாய்ந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சே இதனால் அங்கு பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. குறிப்பாக மரக்காணம் வட்டாரத்தில் அதிக சேதம் ஏற்பட்டது.
புயல் கரையை கடந்த நிலையிலும் மழை 2 நாளாக ஓயாமல் பெய்து கொண்டிருந்தது. மின்துறை அமைச்சர் செந்தில்
பாலாஜி மேற்பார்வையில் மின்அதிகாரிகள், ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மீட்பு பணிகளில் இறங்கினர்.
இன்று வரை அமைச்சர் செந்தில் பாலாஜி விழுப்புரம் மாவட்டத்திலேயே முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். மரக்காணம் பகுதிகளில் சேறும் சகதியுமான கிராமங்களில் நடந்து சென்று மின்துறை சம்பந்தமான சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளார். சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்தும், சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதில் புதிய கம்பங்களை நட்டியும் மீண்டும் மின் வினியோகம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டார்.
இன்று காலை மரக்காணம் தாலுகா கைப்பாணி தாழங்காடு பகுதிகளில் உள்ள மின்கம்பங்களை சாி செய்து மின்இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்தினார். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 4 தினங்களாக விழுப்புரம் மாவட்டத்திலேயே தங்கியிருந்த மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முடுக்கி விடுவதை அறிந்த கிராம மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அமைச்சருடன் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் நந்தகுமார் மற்றும் பொறியாளர்களும் கிராமம் கிராமமாக சென்று பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.