அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பாலாஜிக்கு ஆண்மை தன்மை பரிசோதனை செய்வதற்காக சிறை காவலர்கள், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்தவுடன் மீண்டும் கைதி பாலாஜியை ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்க காவலர்கள் சிறைக்கு உள்ளே அழைத்து சென்றனர். அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், காவலர்களை தள்ளிவிட்டு விட்டு கைதி பாலாஜி தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் உடனடியாக பாலாஜியை கைது செய்ய தங்களது தேடுதலை தொடங்கினர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வெள்ளாழத் தெருவில் கைதி சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற ஆண்டிமடம் போலீசார், ஜெயங்கொண்டம் போலீசார் உதவியுடன், கைதி பாலாஜியை 15 நிமிடத்தில் மடக்கி பிடித்து மீண்டும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.