தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று டில்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைசந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல்ஜீவன் திட்டத்தில் நிலுவையில் உள்ள மத்திய அரசின் ரூ.1,706 கோடியை விடுவிக்கக் கோரி அமைச்சர் மனு அளித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கே. என். நேரு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று நேரில் சந்தித்து பேசினேன். அப்போது மத்திய அரசு கடந்த ஆண்டு ஜல் ஜீவன் இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில் கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, இந்த நிதி ஆண்டிற்கு வழங்க வேண்டிய தொகை மற்றும் இத்திட்டத்தினை 2028-ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக அவருடன் விவாதித்தேன்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி என்.சிவா, டி.எம்.செல்வகணபதி, அருண்நேரு, டி.மலையரசன், எ.மணி, கணபதி ப.ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.