அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து பாலம்கட்டும் பணி 2017ம் தொடங்கப்பட்டு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அனுகு சாலை அமைப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால், மேம்பாலத்திற்கான அணுகு சாலை அமைக்காமல் கிடப்பில் இருந்தது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அணுகுசலை அமைப்பதற்கு 5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கி,
விரைந்து பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகள் ஆகியும், கடலூர் மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் உள்ள கோட்டைக்காடு வெள்ளாற்று உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டும் அணுகு சாலை அமைக்கப்படாததால், சுற்றியுள்ள பாசி குளம், இடையக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தற்காலிக தரைப்பாளத்தையே போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலில் பெய்த கனமழையின் காரணமாக, வெள்ளாற்றில் போடப்பட்ட தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தரைப்பாளத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்த முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்கால அடிப்படையில் பணிகளை துவக்கி தரைப் பாலத்தையும் அணுகு சாலையையும் விரைந்து அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.