Skip to content
Home » பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம்,
பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம்  நடைபெற்றது.

முகாமிற்கு, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் தலைமை வகித்தார் . தஞ்சை எம்பி ச.முரசொலி, மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:

தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று மாத காலத்திற்கு பால், முட்டை, வெல்லம் என சத்தான உணவுப்பொருட்களை வழங்கி வருவதைப் பார்க்கும் போது, நாமும் நமது பகுதியில் இது போல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகம் இந்தியாவின் மருத்துவ மாநிலமாக மாறிவருகிறது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ சேவைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட வலுவான கட்டமைப்பை மருத்துவத் துறையில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஓலைக் குடிசையில் இருந்த ஏழைத்தொண்டனான என்னை திருவிடைமருதூர் தொகுதியில் மூன்றுமுறை போட்டியிட வைத்து மூன்று முறையும் வெற்றி பெற்று இன்றைக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக தளபதி ஆக்கியுள்ளார். அவருக்கு உழைப்பை தவிர வேறு எதை நான் பரிசாக தரமுடியும். இந்த கழகத்தை கட்டிக்காக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்டச் செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், பொது மருத்துவம், பல், கண், மூளை நரம்பியல், எலும்பு முறிவு, தோல் நோய், காது மூக்கு தொண்டை, கேன்சர், இருதய நோய், சிறுநீரகம் உள்ளிட்ட நோய்களுக்கு 1,355 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
560 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர் .

கர்ப்பிணி பெண்களுக்கு பால், முட்டை, கீரை, வெல்லம் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *