பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில் உள்ள வராக நதி ஆற்றின் மேல் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய இரட்டை ரயில் இருப்பு பாதை இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்கிறது. இந்த பாலத்தின் மேல் 2 அடிக்கு தண்ணீர் செல்வதால் முழுமையாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் விழுப்புரம் மற்றும் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி வழியாக சென்னைக்கு செல்கிறது. திருவண்ணாமலை வழியாக செல்ல கூடிய ரயில்கள் ஒருவழி இருப்புபாதை என்பதால் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை தாமதமாக செல்கிறது.
நள்ளிரவில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமாகியுள்ளதால் முன்னறிவிப்பு ஏதுமின்றி பல்லவன், சோழன், வைகை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.