விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த எளிய மக்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்லும் நிலையில் தொடர் மழையின் காரணமாக செஞ்சி பி ஏரிக்கரையில் இருந்து வெளியேறும் மழை நீரானது மருத்துவமனையில் உள்ளே புகுந்ததால் பரபரப்பு நிலவியது. நோயாளிகள் தங்கி உள்ள வார்டுகளில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் வாடுகளில் இருந்து வெளியேறி அவசர வார்டு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால் மழையின் காரணமாக நோயாளிகள் சிலர் மருத்துவம் பார்க்காமல் தங்கள் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக மழை பொழியும்போது மழை நீரானது செஞ்சி அரசு மருத்துவமனைக்கு தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாததால் தொடர்ந்து இது போன்ற அவல நிலை ஏற்படுவதால் செஞ்சி மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க வருவதற்கு பொதுமக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு செஞ்சி அரசு மருத்துவமனையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு மழை நீர் மருத்துவமனை வளாகத்திற்குள் செல்லாதவாறு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.