கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிவறை தனியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கழிவறைக்கு சென்ற பெண் செவிலியர் ஒருவர் கழிவறையில் பேனா வடிவிலான கேமரா ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கழிவறையில் ரகசிய கேமராவை வைத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டதில் மருத்துவமனையில் பயிற்சி
மருத்துவராக பணியாற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ்(33) என்பவர் கழிவறையில் ரகசியமாக பேனா வடிவிலான கேமராவை வைத்து கண்காணித்து வந்தது தெரிய வந்தது.இதைதொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.
புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பயிற்சி மருத்துவர் வெங்கடேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் கோவையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததும், பொள்ளாச்சி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஷ் மருத்துவமனையில் இதுபோன்று வேற ஏதாவது பகுதியில் இது போன்ற கேமராக்கள் வைத்து இருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.