மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் 20,ஆம் தேதியிலிருந்தே மீனவர்கள் கடந்த 11 நாட்களாக கடலுக்கு செல்லாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் புயல் சின்னம் உருவாகி இன்று மாலை கரையை கடக்க உள்ளது,
இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வராமல் உள்ளனர். தற்போது தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.