Skip to content
Home » பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. பெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 கிமீ வேகம் முதல் 80 கிமீ வேகம் வரையும், இடையிடையே 90 கிமீ வேகத்திலும் வீசும். மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை இன்று வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். இன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *