கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த கோரகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (55). விவசாயான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
குளித்தலையில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் கோபால் என்பவரது நிலம் இவரது நிலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. விவசாயி சுப்புராமன் தனக்கு சொந்தமான நிலத்தை உரிய ஆவணங்களுடன் அளவீடு செய்து, கம்பி வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதில் தனக்கு சொந்தமான நிலம் வருவதாக கூறி காவலர் கோபால் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து முறையாக அளவீடு செய்து தனது எல்லை வரை உறுதி செய்த பிறகு கம்பி வேலி அமைத்துள்ளார். ஆனால், அதன் பிறகும் விவசாயி அமைத்த கம்பி வேலியை காவலர்
பிடுங்கி எறிந்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு, மிரட்டல் விடுத்து வருவதாக மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் காரணமாக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயி சுப்புராமன், தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தோடு, முறையாக அளவீடு செய்து அமைக்கப்பட்ட கம்பிவேலியையும் காவலர் கோபால் பிடுங்கி எறிந்ததை குறிப்பிட்டு, வீடு தேடி வந்து மிரட்டல் விடுப்பதால் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், நிலத்தை வாங்கி 3 ஆண்டுகள் ஆன நிலையில் வேலி அமைக்காத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பேட்டியளித்தார்.