மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம். இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தும்.
மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுக.
சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துங்கள்.”
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.