புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(50) அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர். கான்ட்ராக்டர். அதிமுக மாஜி அமைச்சா்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வேலுமணி , மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இவரது அண்ணன் முருகானந்தம், இவரும் சார்லஸ் நகரில் தான் வசிக்கிறார். இவர் புதுகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை(DRDA)யில் வேலை பார்த்தவர். அதிமுக ஆட்சியில் இவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டு தம்பியுடன் சேர்ந்து கான்ட்ராக்ட் தொழிலை செய்து வந்தார். அப்போது இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. DRDAவில் வேலை பார்த்ததால் முருகானந்தம் தமிழ்நாடு முழுவதும் உள்ள DRDA அதிகாரிகளிடம் நெருக்கமாக இருந்து கான்ட்ராக்ட் பெற்று உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெய்டு நடத்தி உள்ளனர். இந்த நிலையில் முருகானந்தம் மட்டும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்து விட்டார். உடனடியாக அவருக்கு பாஜக மாவட்ட பொருளாளர் பதவியும் வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது.
முருகானந்தம் பூர்வீக கிராமம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகாடு. அங்குள்ள வீட்டுக்கு வந்த ஐடி அதிகாரிகள் ரெய்டை சீக்கரமாக முடித்துக்கொண்டு கிளம்பியதாகவும் அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று முருகானந்தம், பழனிவேல் ஆகிய இருவர் வீடுகளிலும் அமலாக்கத்துறை(ED) ரெய்டு நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதுக்கோட்டை சார்ல்ஸ் நகரில் உள்ள முருகானந்தம், பழனிவேல் ஆகியோர் வீடுகளிலும், கருக்காகாடு, மற்றும் ஆலங்குடி ஆகிய இடங்களிலும் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அது தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வேலுமணி, சேலம் இளங்கோவன், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக ஆவணங்கள் கிடைக்கிறதா என்ற அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.